இந்திய யானை (Elephas maximus indicus) என்பது அறியப்பட்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டதுமாகும். 1986 இலிருந்து ஆசிய யானைகள் 60-75 வருட கணக்கெடுப்பில், கடந்த மூன்று தலைமுறைகள் குறைந்தது 50%க்கு மேல் அருகிவருவதால் அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வினம் வாழ்விட இழப்பு, கவனியாமை, பிரிந்து காணப்படல் ஆகிய காரணங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1]
பொதுவாக ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளைவிட சிறியனவாகவும் தலை உயர் உடலமைப்பையும் கொண்டுள்ளன. துதிக்கை ஒற்றை விரல் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இவற்றின் பின்பகுதி புடைத்து அல்லது மட்டமாகக் காணப்படும்.[2] இந்திய யானைகளின் தோள் உயரம் 2 - 3.5 மீ (6.6 - 11.5 அடி) வரையும், அவற்றின் நிறை 2,000 - 5,000 கி.கி. (4,400 - 11,000 பவுண்டு) ஆகவும், 19 சோடி விலா எலும்புகளைக் கொண்டும் காணப்படும். இவற்றின் தோள் நிறம் இலங்கை யானைகளைவிட மங்கியும் சிறிய மங்கல் புள்ளிகளைக் கொண்டும், ஆனால் சுமத்திரா யானைகளைவிட கருமையாகவும் காணப்படும். பொதுவாக, பெண் யானைகள் ஆண் யானைகளைவிட சிறியதாகவும் தந்தம் சிறியதாகவும் அல்லது தந்தம் அற்றும் காணப்படும்.[3]
பெரிய இந்திய யானையாக 3.43 மீட்டர் (11.3 அடி) தோள் உயரமுடைய யானை காணப்பட்டது.[4] 1985 இல் இரு பெரிய ஆண் யானைகள் முதன் முதலில் பார்டியா தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ராஜ காச், கஞ்கா எனப் பெயரிடப்பட்டன. ராஜ காச் 11.3 அடி (3.4 மீ) உயரமான தோளை உடையது. அதன் நெற்றி ஏனைய ஆசிய யானைகளைவிட தனித்துவம் பெற்றுக் காணப்பட்டது.[5]
இந்திய யானைகள் சிறிய காதுகளையும் அகன்ற மண்டையோடுகளையும் ஆப்பிரிக்க யானைகளைவிட பெரிய தந்தங்களையும் உடையன. அவற்றின் கால் புதைமிதியின் முன்பாகம் பெரியதும் அகலமானதும் ஆகும். ஆப்பிரிக்க யானைகளைப் போல் அன்றி அவற்றின் அடிவயிறு சரிசம வீத அளவானவை. ஆனால் ஆப்பிரிக்க யானைகள் ஓப்பீட்டளவில் மண்டையோட்டைவிட பெரிய அடிவயிற்றினைக் கொண்டன.
இந்திய யானைகள் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மர், தாய்லாந்து, மலாய், லாவோஸ், சீனா, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. அவை மேச்சல் நிலங்கள், உலர் இலையுதிர் காடுகள், ஈரளிப்பான இலையுதிர் காடுகள், பசுமையான காடுகள், அரை பசுமையான காடுகள் என்பனவற்றை வாழ்விடமாகக் கொண்டன. 1990 களின் ஆரம்பத்தில் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையளவு பின்வருமாறு:[6]
இந்திய யானை (Elephas maximus indicus) என்பது அறியப்பட்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டதுமாகும். 1986 இலிருந்து ஆசிய யானைகள் 60-75 வருட கணக்கெடுப்பில், கடந்த மூன்று தலைமுறைகள் குறைந்தது 50%க்கு மேல் அருகிவருவதால் அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வினம் வாழ்விட இழப்பு, கவனியாமை, பிரிந்து காணப்படல் ஆகிய காரணங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.