dcsimg

பார்த்தீனியம் ( Tamil )

provided by wikipedia emerging languages

பார்த்தீனியம் அல்லது பார்தினியம் என்பது ஒரு குறுஞ்செடியாகும். இவைகளை கரட் புல் (மல்லிக்கிழங்குப் புல்) அல்லது கசார் கச் என விளிக்கின்றனர். இவை செடிகளின் ’நட்சத்திர’ குடும்பமான ஆச்டெரேசியே வகைப் பூந்தாவரமாகும். பார்த்தீனியம் அர்செண்டேடம், பா. இங்கானம் மற்றும் பா. இச்டெரோபோரசு ஆகியன இக்குடும்பத்தில் நன்கு அறியப்பட்ட சிற்றினமாகும். இவை களைகளாய் விளைநிலங்கள், சாலையோரங்களில் செழித்துக் காணப்படுகின்றன. இவற்றின் தாய்நிலம் வட அமெரிக்கா.[3][4] இவை படையெடுக்கும் இனத் தாவரங்கள் (Invasive species) ஆகும்.[5]

பண்புகள்

நன்கு (3-4 அடி) வளரக்கூடிய ஆழ்வேர்களைக் கொண்ட பூக்களாள் நிறுவப்பட்ட தாவரமாகும். இவைகளில் நன்கு அறியப்பட்ட பா. இச்டெரோபோரசு நட்சத்திரம் போன்ற வெண்பூக்களால் படரப்பட்ட தாவரமாகும். இவை அந்நியச் செடி (அமெரிக்கா பூர்வீகம்) ஆனால் நம் நாட்டில் இவை களையாக உருவெடுத்துள்ளது. இவை ஐப்பசி-கார்த்திகைகளில் அடர்ந்து வளர்கின்றன. இவ்வாறு வளரும் போது இவை பூந்தாதுக்களை அதிகமாய் உற்பத்தி செய்து காற்றில் பரவவிடுகின்றன. ஆதலால் இவை பேருயிர்களின் சுவாசக் குழலுக்குள் சென்று ஒவ்வாமையை ஊக்குவிக்கின்றன. இவற்றின் மேற்றோலில் ஒருவிதமான மேல்மயிர்கள் காணப்படுகின்றன. இவையும் விலங்குகளின் உடலில் படும் போது அரிப்பு போன்ற உணர்வு ஏற்படும்.

பயன்கள்

இவைகளில் பா. அர்செண்டம் அமெரிக்க நாடுகளில் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வட அமெரிக்காவைச் சேர்ந்த சிகரில்லா அபச்சி மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இரண்டாம் உலகப்போரின் போது பார்த்தினியத்தின் ஒரு வகையானது இறப்பர் உற்பத்தியில் இறப்பருக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டது.

தீமைகள்

இவற்றால் நன்மைகளை விட தீமையே அதிகம். காரணம். அந்நிய நாட்டில் எந்தவொரு தாவரமும் களைதான். உதாரணம் ஆசுதிரேலியாவில் 70% அதிகமாக அந்நிய செடிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதைத் தடுக்க அந்நாடு வெளிநாடுகளிலிருந்து செடிகளை இறக்குவதில் தடை விதித்துள்ளது. அதேபோல் இத்தாவரமும் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. இவை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பரந்து கிடக்கின்றன. இவை வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துக்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறுகளையும், ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகின்றன. இவற்றின் மீது எமது உடல் படும் போது ஒருவிதமான அரிப்பு காணப்படும். இவற்றை உண்ணும் பசுக்களின் பால் ஒரு வித கசப்புத்தன்மையையும், சிறிதளவான அதாவது மறைமுகமான நச்சுத்தன்மையையும் கொண்டிருக்கும்.

நோய்கள்

இவை சருமநோயான சருமவழல், சொறி/கரப்பான் நோயை உண்டாக்குகின்றன - பா. இச்டெரோபோரசு. இவை ஆச்துமா என அறியப்படும் ஈளநோய்/ஈழைநோயையும்; குருதிசெவ்வனு நலிவு (ஈசினோபீலியா) எனப்படும் நோயை உண்டாக்குகிறது. இதனால் வகை 1 மிகையுணர்வூக்கம் தோற்றத்திற்கும் வழிகோறுகிறது.

காரணங்கள்

சூழ்நிலை மாற்றம் பயிர்களை எதிர்த்து வளரத்தூண்டுகிறது. இவைகளுக்கு இயற்கையாகவே கட்டுப்படுத்துவதற்கு இயற்கையெதிரி ஒன்று இயங்கி வரும் ஆனால் அவை இங்கு காணப்படாததால் தடையின்றி வளர்ச்சி. விழிப்புணர்ச்சி இன்மையால் மனிதன் இதுபோல் கொண்டு வந்த தாவரங்கள் சில வெங்காயத்தாமரை, முட்செடி ஆகியன.

அழிக்க வேண்டியதன் நோக்கம் மற்றும் முறைகள் சில

இச்செடியை அழிப்பது கட்டாயமாகும். ஏனெனில், இவை விளைநிலங்களையும் வளிமண்டலத்தையும் பெரிதும் மாசுபடுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவ்வினங்களே முற்றிலும் அழிவதற்கு பெருங்காரணமாய்த் திகழ்கின்றன. மனிதர்கள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு காற்று மாசுபடுதல் மூலம் சுவாசம், நுரையீரல் மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாக கொண்ட கரட் புல்/மல்லிக்கிழங்குப் புல்/காஜர் ஹான்ஸ்/ பார்த்தினியம் என்றழைக்கப்படும் பார்த்தீனியம் செடிகள் (Parthenium hysterophorus) களைச்செடிகளாக பயிர்களுக்குப் பாயும் நீரையும் பங்குபோடுகின்றன.

அவற்றை முறைப்படி அழிக்க செடிகளைப் பூக்கள் சிதறாமல் வேரோடு பிடிங்கி பள்ளத்தில் இட்டு, கல் உப்பு கலந்த சோப்பு நீர்க்கரைசல் தெளித்து அல்லது காமாக்சின் (எறும்பு மருந்தாகவும் பயன்படுகிறது) என்னும் வேதிப்பொருளை இட்டு, செடிகள் பட்டுப் போய் வாடிய பின், எரித்து, குழிகளை மூடி, அந்த இடங்களில் ஆவாரம் பூச் செடிகள் நட்டி வளர்ப்பதன் மூலம் மட்டுமே இக்களைகளை நாம் அழிக்கமுடியும்.

இவைகளை தழைச்சத்தாக இடுவதன் மூலம் மேலும் இதன் பூக்கள் மூலம் இவை வளர்ந்து பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஆடு, மாடு மற்ற கால்நடைகளுக்கு இரையாக போட்டாலோ, மேச்சலில் அவைகள் தவறுதலாக உண்டாலோ அவற்றிற்கு நோய்கள் வந்து இறைச்சி மற்றும் பால் மூலம் மனிதர்களைத் தாக்குவதோடு, சாணக்கழிவுகளில் இதன் மகரந்தங்கள் மீண்டும் இவை வளர்ந்து பரவிப் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஆகையால், இவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.

நாட்டுக்கு நாடு பரம்பலடைந்தமை

இந்தியா

பார்த்தீனியத்தின் பூர்வீக நாடு அமெரிக்கா ஆகும். அக்காலங்களில் அமெரிக்கா இந்தியாவுக்கு கோதுமை மா போன்ற உணவுப்பொருட்களை இறக்குமதி செய்தது. அதன்போது அவை கோதுமை மாக்களுடன் கலக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தடைந்தது என நம்பப்படுகின்றது.

இலங்கை

இலங்கையில் யுத்த காலங்களில் இந்திய இராணுவத்திறகு உணவு வழங்கும் பொருட்டு இந்திய அரசாங்கத்தால் பல செம்மறியாடுகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன, அப்போது பார்த்தீனியவிதைகள் ஆடுகளின் உடலில் ஒட்டியிருந்தோ அல்லது அவற்றின் மலத்தில் சமிபாடடையாத உணவாகவோ இருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.இந்தியப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தில் மனிதர்களுக்கும், விவசாய நிலங்களுக்கும், கால்நடை மற்றும் விலங்குகளுக்கும் ஊறு விளைவிக்க இது வட- கிழக்கில் இந்தியப்படையினால் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்தது.[6] வவுனியாவில் மட்டும் 200 கெக்டயர் நிலம் இதனால் பாதிக்கப்பட்டு, பல பின் விளைவுகளாக களை கட்டுப்படுத்த முடியாமை மற்றும் தோல் நோய்களும் ஏற்பட்டது.[7]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  1. "GENUS Parthenium". Taxonomy. UniProt. பார்த்த நாள் 2010-10-29.
  2. "Genus: Parthenium L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (1998-09-03). பார்த்த நாள் 2010-10-29.
  3. Linnaeus, Carl von. 1753. Species Plantarum 2: 988 in Latin
  4. Tropicos, Parthenium L.
  5. "Parthenium hysterophorus (herb)". Global Invasive Species Database. Invasive Species Specialist Group (2010-10-04). பார்த்த நாள் 2011-08-09.
  6. Beware of this weed by Dr. A.H. Magdon Jayasuriya
  7. 'Parthenium' weed destroys agricultural lands in NEP
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பார்த்தீனியம்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பார்த்தீனியம் அல்லது பார்தினியம் என்பது ஒரு குறுஞ்செடியாகும். இவைகளை கரட் புல் (மல்லிக்கிழங்குப் புல்) அல்லது கசார் கச் என விளிக்கின்றனர். இவை செடிகளின் ’நட்சத்திர’ குடும்பமான ஆச்டெரேசியே வகைப் பூந்தாவரமாகும். பார்த்தீனியம் அர்செண்டேடம், பா. இங்கானம் மற்றும் பா. இச்டெரோபோரசு ஆகியன இக்குடும்பத்தில் நன்கு அறியப்பட்ட சிற்றினமாகும். இவை களைகளாய் விளைநிலங்கள், சாலையோரங்களில் செழித்துக் காணப்படுகின்றன. இவற்றின் தாய்நிலம் வட அமெரிக்கா. இவை படையெடுக்கும் இனத் தாவரங்கள் (Invasive species) ஆகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்