dcsimg

கபில மார்புப் பூங்குயில் ( Tamil )

provided by wikipedia emerging languages

கபில மார்புப் பூங்குயில் (Phaenicophaeus curvirostris) என்பது குயில் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். தென்கிழக்காசியாவில் மியான்மர் முதல் கீழைச் சாவகம், பிலிப்பைன்சு மற்றும் போர்னியோ வரையிலான பகுதிகளில் பரவிக் காணப்படும் இப்பறவையினம், 49 செமீ (19 அங்குலம்) வரை வளரக்கூடியது. இதன் மேற்பகுதி சாம்பல் மற்றும் கடும் பச்சை நிறமாகவும் கீழ்ப் பகுதி செங்கபில நிறமாகவும் இருப்பதுடன் வெளிறிய மஞ்சள் நிறத்திலான அதன் சொண்டு சற்றுப் பெரிதாகவும் மேற்பகுதி கீழ் நோக்கி வளைந்தும் இருக்கும். இப்பறவைகளின் இறகுகளின் நிறங்களின் அடிப்படையில் ஆண், பெண் இரண்டும் ஒரே மாதிரியாகக் காணப்படும். ஏராளமான ஏனைய குயிலினங்களைப் போலன்றி, கபில மார்புப் பூங்குயில்கள் தம் கூடுகளைத் தாமே கட்டுவதுடன் தம் குஞ்சுகளையும் பராமரிக்கும் தன்மையும் உடையனவாகும்.[1]

துணையினங்கள்

கபில மார்புப் பூங்குயில்களில் ஆறு துணையினங்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அவை:

தோற்றம்

42-49 செமீ (17-19 அங்குலம்) வரை வளர்ச்சியடையத் தக்கதான கபில மார்புப் பூங்குயில் பெரிய, வளைந்த, வெளிர் மஞ்சள் நிறத்திலான மேற் சொண்டையும் நிறங் கடுமையான அல்லது சிவந்த அல்லது கறுத்த கீழ்ச் சொண்டையும் கொண்டிருக்கும். இதன் கண்களைச் சுற்றித் தனிச் சிவப்பிலான அடையாளமொன்று காணப்படுவதுடன், தலை சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் சிறகுகள் கடும் பச்சை நிறத்திலிருந்த போதிலும் முதுமையடையும் போது நிறம் மங்கி, சற்று நீல நிறமாக மாறும். மார்புப் பகுதியும் கால்களுக்கு இடைப்பட்ட பகுதியும் செங்கபில நிறமாக இருப்பதுடன், கால்கள் கடும் சாம்பல் நிறத்தைக் கொண்டிருக்கும்.[2] இப்பறவைகளின் இறகுகளின் நிறங்கள் ஆண், பெண் பறவைகளுக்குப் பொதுவாக இருப்பினும், ஆண் பறவையின் கண் புரை வெளிர் நீலமாகவும் பெண் பறவையின் கண் புரை மஞ்சளாகவும் காணப்படும்.

பரம்பலும் வாழிடமும்

கபில மார்புப் பூங்குயில்கள் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், மேலைப் பிலிப்பீன்சு, தென் தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிற் காணப்படுகின்றன.[2]

இப்பறவைகளின் இயற்கை வாழிடங்கள் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளும் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டலக் கண்டற் காடுகளுமாகும். இவை பொதுவாக மரங்களின் அடர்ந்த இலைகளுக்கிடையிலேயே வசிக்கும்.[2] இந்நாட்களில் இப்பறவைகளின் வாழிடங்களான காடுகள் பெரிதும் அழிக்கப்படுகின்றன.

உணவுப் பழக்கம்

இப்பறவையினம் சிறிய பல்லி, தவளை, பறவைக் குஞ்சுகள் போன்ற சிறு முண்ணானிகளையும் மயிர்க்கொட்டிகள், வெட்டுக்கிளி, கரப்பான் பூச்சி, வண்டு போன்ற பூச்சிகளையும்,[2] சிலந்தி, சிறு நண்டு போன்றவற்றையும் உணவாகக் கொள்ளும்.

இனப் பெருக்கம்

ஏனைய குயிலினங்களில் ஏராளமானவற்றைப் போலன்றி, கபில மார்புப் பூங்குயில்கள் தம் கூடுகளை அமைத்துக் கொள்வதுடன் தம் குஞ்சுகளையும் தாமே வளர்க்கும்.[1] இவற்றின் இனப்பெருக்க காலம் இடத்துக்கிடம் வேறுபடும். இது போர்னியோவில் ஆகஸ்ட் முதல் திசம்பர் வரையிலும் ஏனைய தென்கிழக்காசியப் பகுதிகளில் ஜனவரி, செப்டெம்பர் என வேறுபடுவதாகவும் இருக்கும். இவ்வினத்தின் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடும் காலத்தில் சிறு மரக் கிளைகளையும் குச்சிகளையும் கொண்டு கிட்டத்தட்ட 35 செமீ (14 அங்குலம்) விட்டம் கொண்ட கூட்டை அமைக்கும்.[2] கூட்டின் உட்பகுதியில் இலைகளை அடுக்கி கோப்பை போல ஆக்கும். 34 x 28 மிமீ அளவான இரண்டு அல்லது மூன்று வெண்ணிற முட்டைகளை இடும். ஆண், பெண் இரண்டும் சேர்ந்து முட்டைகளை அடைகாக்கும். முட்டைகள் பொரிப்பதற்கு கிட்டத்தட்ட 13 நாட்கள் எடுக்கும். இளம் குஞ்சுகள் 11 நாட்கள் வரை கூட்டிலேயே இருக்கும். இக்காலப் பகுதியில் பெற்றோரான ஆண், பெண் இரண்டும் சேர்ந்து குஞ்சுகளுக்கு இரையூட்டும்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Payne, p. 297
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Morten Strange (2000). Photographic Guide to the Birds of Southeast Asia. Singapore: Periplus. பக். 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:962-593-403-0.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கபில மார்புப் பூங்குயில்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கபில மார்புப் பூங்குயில் (Phaenicophaeus curvirostris) என்பது குயில் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். தென்கிழக்காசியாவில் மியான்மர் முதல் கீழைச் சாவகம், பிலிப்பைன்சு மற்றும் போர்னியோ வரையிலான பகுதிகளில் பரவிக் காணப்படும் இப்பறவையினம், 49 செமீ (19 அங்குலம்) வரை வளரக்கூடியது. இதன் மேற்பகுதி சாம்பல் மற்றும் கடும் பச்சை நிறமாகவும் கீழ்ப் பகுதி செங்கபில நிறமாகவும் இருப்பதுடன் வெளிறிய மஞ்சள் நிறத்திலான அதன் சொண்டு சற்றுப் பெரிதாகவும் மேற்பகுதி கீழ் நோக்கி வளைந்தும் இருக்கும். இப்பறவைகளின் இறகுகளின் நிறங்களின் அடிப்படையில் ஆண், பெண் இரண்டும் ஒரே மாதிரியாகக் காணப்படும். ஏராளமான ஏனைய குயிலினங்களைப் போலன்றி, கபில மார்புப் பூங்குயில்கள் தம் கூடுகளைத் தாமே கட்டுவதுடன் தம் குஞ்சுகளையும் பராமரிக்கும் தன்மையும் உடையனவாகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்