சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பதை அறியாதவர்கள், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கிறார்கள். இவ்விலங்கிற்கு "கருங்குரங்கு" என்றொரு பெயருமுண்டு. சங்க இலக்கியங்களில் இது நரைமுக ஊகம் என அறியப்படுகிறது.[3]
இவ்விலங்கின் வெளிமயிர் கருப்பு நிறத்திலானது. இதன் வெள்ளை அல்லது வெள்ளி நிறத்திலான பிடரிப் பகுதியின் மயிர்கள் இவ்விலங்கிற்கே உரிய சிறப்பாகும். இதன் முகம் மயிர்கள் ஏதுமின்றி கருப்பு நிறத்தில் காணப்படும். தலை முதல் வால் வரையிலான நீளம் 45 முதல் 60 செ. மீ ஆகும் மற்றும் இதன் உடல் எடை 3 முதல் 10 கிலோகிராம் வரை இருக்கும். இதன் வால்ப்பகுதி மட்டும் சுமார் 25 செ. மீ நீளமாகும் மற்றும் வாலின் நுனிப்பகுதியில் கருப்பு நிறத்திலான ஒரு மயிர் கொத்து இருக்கும். இம்மயிர் கொத்து ஆண் மந்திகளுக்கு மிகுதியாகவும், பெண் மந்திகளுக்கு சற்று குறைந்தும் காணப்படும்.
வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டும் வாழும் சோலைமந்தி பகற்பொழுதில் மட்டும் சுறுசுறுப்புடன் காணப்படும் பகலாடியாகும். மரமேறுவதில் மிகவும் திறமைவாய்ந்த இம்மந்தி தன் பெரும்பாலான நேரத்தை உயர்ந்த மரக்கிளைகளிலேயே கழிக்கும். மிகவும் கூச்சவுணர்வுடைய இவ்விலங்குகள் மனிதர்களைத் தவிர்த்தே வாழவிரும்புபவை. இவை 10 முதல் 20 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டக் குழுக்களாக வாழும் நடத்தையைக் கொண்டவை. ஒரு குழுவில் ஒரு சில ஆண் மந்திகளும் பல பெண் மந்திகளும் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும், தங்கள் எல்லைக்குள் வேறொரு குழு நுழையும்பொழுது, மிகுந்த ஓசையுடன் கூச்சலிடும், சில வேளைகளில் வேற்றுக்குழு உறுப்பினருடன் சண்டைகளும் நடக்கும்.
இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 6 மாதங்களாகும். பிறந்ததிலிருந்து ஒருவருட காலம் வரை குட்டி தன் தாயின் அரவணைப்பில் வாழும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 20 ஆண்டுகள் எனவும் விலங்குக்காட்சியகங்களில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.[4]
சோலைமந்திகள் மழைக்காடுகளின் மரக்கிளைகளில் மட்டும் வாழக்கூடிய ஒர் குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறையை கொண்டவை. இவை பழங்கள், இலைகள், பூவின் மொட்டுகள், பூச்சிகள், முதுகெலும்பற்ற சிறு விலங்குள் ஆகியவற்றை உண்கின்றன. இம்மந்திகள் பகற்பொழுதில் பெரும்பாலான நேரத்தை உணவு தேடுவதிலேயே கழிக்கின்றன. இது மிகவும் விரும்பி உண்ணும் பழவகைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் மரங்களில் கிடைக்கக்கூடியவை.[5]
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் (IUCN) அண்மைய கணக்கெடுப்பின்படி சோலைமந்தியின் மொத்த உயிர்த்தொகை 3000 முதல் 3500 இருக்கக்கூடும்.[6] உலகிலுள்ள முதனிகளில் மிகவும் அரிதானதும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளானதுமான முதனிகள் சோலைமந்திகளாகும். இவை தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பசுமைமாறாக் காடுகளில் மட்டும் காணப்படுகின்றன.[7] இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் வேளாண்மை மேற்கொள்ளப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் சோலைமந்திகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன.
சோலை எனும் வாழிடம் தியோடர் பாஸ்கரன்
சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பதை அறியாதவர்கள், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கிறார்கள். இவ்விலங்கிற்கு "கருங்குரங்கு" என்றொரு பெயருமுண்டு. சங்க இலக்கியங்களில் இது நரைமுக ஊகம் என அறியப்படுகிறது.