நத்தை குத்தி நாரை அல்லது அகலவாயன்[2](Anastomus oscitans) நீர்நிலைகளைச் சார்ந்திருக்கும் நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பறவையினமாகும். இந்தத் தனிச்சிறப்புள்ள பறவையினம் இந்திய துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாகக் காணப்பெறுகிறது. ஓரிடத்தில் தங்கும் பறவையெனினும் சிறுதொலைவுக்குப் பறந்துசென்று இரைதேடும் பண்புடையது.
இவை சற்றே சாம்பல்கலந்த வெள்ளை நிறமும் பளபளக்கும் கருநிறச்சிறகும் வாலும் கொண்டிருக்க, கருத்த உடல் பகுதிகள் ஒருவகை பச்சை வண்ணம் அல்லது ஊதா போன்ற நிறத்தில் பளபளப்பாக மின்னுகின்றன. வளர்ந்த பறவைகளுக்கு இரு அலகுகளுக்கு இடையில் ஒரு துளை போன்ற அமைப்பு சிறப்பு. இத்துவாரமானது மேல் அலகு மேல்நோக்கி வளைந்திருப்பதனாலும், அதற்குத்தகுந்தாற்போல் கீழ் அலகு கீழ்நோக்கி வளைந்தும் உள்ளதால் உருவாகிறது. புதிதாய் பிறந்த குஞ்சுகளிலும், இளம் பறவைகளிலும் இவ்வாறான துளையைக் காண இயலாது, எனினும் அவற்றின் மேநிறம் பெரியபறவைகளையொத்தே இருக்கும். இவ்வகையான துவாரத்தினால் இவை தன் முக்கிய இரையான நத்தைகளை வெகு இலாவகமாகப் பற்றிக்கொள்வதாலேயே இவ்வினத்திற்கு இப்பெயர் வரக்காரணம். மேலும் இவ்வலகுகளின் பிடிமானத்திற்கானப் பரப்பில் (மேல் அலகிற்கு கீழ் பகுதியும், கீழ் அலகின் மேல் பகுதியும்) தூரிகை போன்று அமைப்புள்ளதால் நத்தைகளின் வழுக்கும் ஓட்டினைச் சரிவரப் பிடிக்க இப்பறவையால் இயலும்.[3] அலகு தொடங்கும் இடத்தில் சிறிதளவு கருப்பு இருப்பினும், எஞ்சிய நீளம் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும். சற்றே குட்டையான கால்கள் பவள நிறத்திலும் இனவிருத்திக் காலத்தில் சசிவப்பாகவும் மாறும். இனவிருத்திகக்காலமல்லாதபோது பறவைகளின் முதுகுப்புறத்தில் புகையாலடித்தது பழுப்பு போன்ற நிறமாகவும் இளம்பறவைகள் இளஞ்சிவப்பு கலந்த பழுப்பு நநிறம் கொண்டும் இருக்கின்றன. இவை சராசரியாக 68 செ.மீ. உயரமுடையவை, எனினும் பிற நாரைகளைப்போன்று இறகுகளையும் கழுத்தையும் நன்றாக விரித்து வானில் வெப்பக்காற்றின் போக்கிற்கேற்ப வட்டமிடும் தன்மையுடையவை. இதனால் இவை பறக்கும்போது மிகக்குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி வானில் நெடுநேரம் பறக்க இயலும்[4][5][6].
இவை பொதுவாக உள்நாட்டு நீர்நிலைகளை நாடுகின்றன என்றாலும் சில நேரங்களில் ஆற்றங்கரையோரங்களிலும், கடலோரங்களிலும் காண இயலும். நத்தை குத்தி நாரைகள் இந்திய துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாகக் காணப்பெறுகின்றன. இவை உணவை நாடி பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.[4][7] இந்நாரைகள் தென்கிழக்கு இந்தியாவில் கலங்கரைவிளக்கங்களின் ஒளியால் திசையறியாது தத்தளிக்கவும் செய்கின்றன.[4] இவை பாகிஸ்தான் பகுதிகளான சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் அரிதாக இருப்பினும் இந்தியா, மியான்மார், தாய்லாந்து, இலங்கை போன்ற பிரதேசங்களில் பரவியிருக்கின்றன.[8]
மிகவும் முக்கியமான இரை நத்தைகள் என்றாலும், இவை நண்டுகள் மற்றும் பல கடின உடல்கொண்ட உயிரினங்களை உண்ணுகின்றன. இப்பறவைகள் தன் அலகுகளின் இடையிருக்கும் துவாரம் தன்னில் நத்தைகளை வைத்து அழுத்தி வெளிப்புற ஓட்டினை உடைத்து உட்புற மாமிசத்தினை உட்கொள்கின்றன. எனினும், குஞ்சுகள் முழுக்க முழுக்க மீன்களையே உண்கின்றன. எனவே இனவிருத்தி காலத்தில் மட்டும் இப்பறவையினம் சிறு வகை மீன் பிடிப்பதனை காணலாம். மற்ற நாரைகளைப் போல், நத்தை குத்தி நாரையும் பறந்து சென்று தன் உணவிடங்களை அடைகின்றன. அடிக்கடி சிறகுகளை அடித்துக்கொள்ளாமல் பறக்கின்றன. சதுப்பு நிலங்களுள்ள இடங்களில் நத்தைகள் அதிகம் காணப்பெறுவதனால், இவை இவ்வாறான இடங்களில் தரையிறங்குகின்றன. பிலா இனத்தில் உள்ள பெரிய நத்தைகளை பிடித்து அதன் தசையை ஓட்டிலிருந்து அலகின் இடைவேளையால் பிரித்தெடுத்து உண்ணுகின்றன. கீழலகின் நுனியினைக்கொண்டு அவை வலப்புறம் நகர்த்தி நுனியினை நத்தையோட்டின் நுழைவாயிலில் உட்புகுத்தி உடலை உறிஞ்சுகின்றன. இவை அனைத்தும் நீரின் அடியிலேயே முடிகிறது. தாமஸ் சி. ஜெர்டான் என்ற பறவை ஆராய்ச்சியாளர் இவை கண்கள் கட்டிய நிலையிலும் நத்தைகளைச் சரிவரப் பிடித்துண்பதனைக் கண்டறிந்துள்ளார். சரியாகக் காண இயலமுடியாத சூழ்நிலையில் இதனை எப்படி சாதிக்கின்றன என்பது கற்பனைக்குரியதே. சர் ஜூலியன் ஹக்ஸ்லி என்பவர் இது தன் அலகின் இடைவெளையை கொட்டை உடைப்பானைப் போல் பிரயோகப்படுத்துவதையும், இதன் அலகிலிருக்கும் பல் போன்ற தடங்கள் இவ்வகை விசைகளினால் உண்டானதையும் கண்டுபிடித்துள்ளார்[9]. ஆனால் பின்வந்த பல ஆராய்ச்சிகளும் இவ்வகையான பல் போன்ற அமைப்புகள் கடினமான மற்றும் வழுக்கும் நத்தை ஓடுகளைச் சரியாகக் கையாளும் ஒரு உடல்கூறின் பரிணாம வளர்ச்சி என்று பறைசாற்றியுள்ளன.[3][10] இவை தன் அலகுகளைக் கொஞ்சம் விலக்கியே இரையைத் தேடுகின்றன என்றும் இரையை தொடு உணர்ச்சியால் கண்டறிந்த உடனேயே பிடித்துக்கொள்கின்றன. இவ்வகை விசைகளை இவை நீரில் அலகையும் சிறிது தலையையும் மூழ்கி இருக்கும் தருணங்களிலும் செய்ய இயலும். அலகின் இடைவேளை வயதாக ஆக விரிவடையும் என்றாலும், இளம் பறவைகளும் நத்தைகளை வேட்டையாடுவதில் வல்லமை பெற்றே இருக்கின்றன. எனவே அலகின் அமைப்பு நத்தை ஓட்டின் மீது தரும் அழுத்தும் விசையை அதிகரிக்கவே என்றும் தெரிகிறது. சிறு நத்தைகள் உடைத்தோ உடைக்காமலோ உண்ணப்படுகின்றன.[10] இவை நீர்ப்பாம்புகள், தவளைகள் மற்றும் பெரிய பூச்சிகளையும் சமயங்களில் உட்கொள்கின்றன[11].
இனவிருத்திக்காலம் வட இந்தியாவில் மழைக்குப் பின் சூலை முதல் செப்டம்பர் வரை மற்றும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் நவம்பர் முதல் மார்ச் வரை. வறட்சிக்காலங்களில் இவை இனப்பெருக்கம் செய்வதில்லை. பொதுவாக மற்ற வகை நாரைகள் போன்று இவையும் அமைதியாக இருப்பினும் ஆண்கள் பெண்ணுடன் இணையும்போது மட்டும் அலகுகளை அடித்துக்கொண்டு ஒலியெழுப்புகின்றன. இதே போல் தன் இணை கூட்டிற்கு திரும்பும் வேளையில் குறைந்த ஹாரன் சத்தத்தினை வெளிப்படுத்துகின்றன.[8][12][13]
பாதி மூழ்கியுள்ள மரங்களின் கிளைகளில் இவை குச்சிகளை ஒரு பலகைபோல் வடிவமைத்துக் கூடு கட்டுகின்றன. இம்மரங்களை மற்ற பறவைகளான கொக்குகள், நாரைகள், நீர்க்காகங்கள், ஆகியனவற்றுடன் நேசமாகப் பகிர்ந்து கொள்கின்றன. சில நேரங்களில் கிராமங்கள் மத்தியிலும் தொந்தரவைப்பொருட்படுத்தாமல் கூடு கட்டுகின்றன[14]. தன் சகபறவைகளின் கூடுகளின் மிக அருகாமையில் இருப்பதால், அக்கம்பக்கத்தினரோடு அடிக்கடி சண்டை மூளவும் வாய்ப்புள்ளது.
சுமாராக 2 முதல் 4 முட்டைகள் இடுகின்றன. இரு பெற்றோரும் அடை காக்கவும் கூட்டைப்பராமரிக்கும் பணியிலும் பங்களிக்கின்றன. 25 நாட்கள் வரை அடைகாத்தபின் குஞ்சுகள் பொரிகின்றன. சில நேரங்களில் ஒரு ஆண் பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள ஒரே கூட்டில், இரு பெண்களும் முட்டையிட வாய்ப்புள்ளது[15].
முட்டைக்குள்ளிருந்து குஞ்சுகள் வெளிர்மஞ்சள் நிறத்தில் பொரிய, இவற்றைப் பெற்றோர் இறகுகளைப் பாதி விரித்த நிலையில் நிழலளித்து காக்கின்றன[4].
இப்பறவையின் கூடுகள் திறந்தே இருப்பதனால் கழுகுகளும், பெரும் புள்ளிப்பருந்துகளும் சிறு குஞ்சுகளை வேட்டையாட இயலுகிறது[16]. Chaunocephalus ferox என்ற குடலின் உட்புறம் தாக்கும் நாக்குப்பூச்சி போன்றிருக்கும் உடலுண்ணி இவ்வினப்பறவைகளை தாக்குகிறது. இவை தாய்லாந்தில் 80 சதவிகித பறவைகளில் காணப்பெறுகின்றன[17]. Echinoparyphium oscitansi என்ற இன்னொரு இனமும் தாய்லாந்திலுள்ள பறவைகளில் வாழ்கின்றது[18]. பிற வகையான உண்ணிகள் Thapariella anastomusa, T. oesophagiala மற்றும் T. udaipurensis இரைக்குழாயில் கண்டறியப்பட்டுள்ளன[19][20].
நத்தை குத்தி நாரை அல்லது அகலவாயன்(Anastomus oscitans) நீர்நிலைகளைச் சார்ந்திருக்கும் நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பறவையினமாகும். இந்தத் தனிச்சிறப்புள்ள பறவையினம் இந்திய துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாகக் காணப்பெறுகிறது. ஓரிடத்தில் தங்கும் பறவையெனினும் சிறுதொலைவுக்குப் பறந்துசென்று இரைதேடும் பண்புடையது.